அம்பிகை மயில் வடிவில் இத்தலத்து இறைவனை வழிபட்டதால் 'மயிலாடுதுறை' என்று அழைக்கப்படுகிறது. சுவாமியும் மயில் வடிவில் வந்து கௌரீ தாண்டவம் ஆடி, பின்னர் இருவரும் சுய வடிவம் பெற்று அருள்பாலித்தனர். அதனால் மூலவரும் 'மயூரநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'மயூரநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அபயாம்பிகை', அஞ்சல்நாயகி என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நடராஜர், நால்வர், மகாலட்சுமி, பைரவர், சனி பகவான், சூரியன், நவக்கிரகங்கள் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
கோயில் பிரகாரத்தில் ஆதி மயூரநாதருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு அம்பிகை மயில் வடிவில் லிங்க பூஜை செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கின்றாள்.
ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி சுவாமி தீர்த்தவாரி கொடுப்பார். அந்நிகழ்வு 'துலா கடை முழுக்கு' என்று வழங்கப்படுகிறது. அதேபோல் மறுநாள் கார்த்திகை முதல் நாளன்று நடைபெறும் காவிரி நீராடலை 'முடவன் முழுக்கு' என்று அழைப்பர்.
திருமால், பிரம்மா, இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|